சீர்வரிசையை திரும்ப கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பள்ளிப்பட்டு: கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசிக்கும் பெண், சீர்வரிசையை திரும்ப கேட்டதால், கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திருத்தணி அடுத்த வி.கே.ஆர்.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா, 27. இவருக்கும், பள்ளிப்பட்டை சேர்ந்த சரவணகுமார், 27, என்பவருக்கும், 2023ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 10 மாதங்கள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பின், தாய் வீட்டில் சுனிதா வசித்து வருகிறார். இந்நிலையில், திருமணத்திற்கு போடப்பட்ட, 20 சவரன் நகையை திரும்ப கொடுக்கும்படி, கடந்த 13ம் தேதி சரவணகுமாரிடம் கேட்டுள்ளார். அப்போது, சரவணகுமாரின் சகோதரர் ராஜசேகர், அவரது மனைவி கோமதி மற்றும் மாமியார் கஸ்துாரி ஆகியோர், சுனிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புகாரின்படி, பள்ளிப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், சுனிதாவின் தாய் சுப்புலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் ஏழு பேர், ராஜசேகரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாகவும், ராஜசேகரின் மனைவியின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாயை எடுத்து சென்றதாக ராஜசேகர், பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.