திருத்தணி முருகன் கோவிலுக்கு ரூ.57 கோடியில் மாற்றுப்பாதை ஜனவரியில் பணிகள் துவக்கம்
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, 57 கோடி ரூபாயில் மாற்றுப்பாதை பணி, ஜனவரி மாதம் துவங்கப்படும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கார், பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மூலம் மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது, மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்றுவர, ஒரு மலைப்பாதை மட்டுமே உள்ளதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, கிருத்திகை மற்றும் முக்கிய விழா நாட்களில் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், 3 கி.மீ., வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, மேல்திருத்தணியில் இருந்து, மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்று வர, 13 ஆண்டுகளுக்கு முன், 2008 -- 09ல், திட்ட அளவில் இருந்த மாற்று மலைப்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் துவக்கி வைத்தார். தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து, மாற்று மலைப்பாதைக்கு, 57 கோடி ரூபாயில், இரண்டாவது மலைப்பாதை அமைக்க, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம், திருத்தணி நெடுஞ்சாலை துறையினரிடம் பணியை ஒப்படைத்தது. இதுகுறித்து, திருத்தணி கோவில் அதிகாரி கூறியதாவது: முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை, மேல்திருத்தணியில் இருந்து மலைக்கோவில் வரை 2 கி.மீ.,க்கு சாலை அமையவுள்ளது. இச்சாலை பணிகளுக்கு, வனத்துறைக்கு சொந்தமான 2.07 ஏக்கர் நிலமும், 13 பேரின் தனியார் நிலம், 2.08 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் நபர்களுக்கு இழப்பீடு தொகை, 4.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஓரிரு நாளில் வழங்கப்பட உள்ளது. வனப்பகுதியில் கையகப்படுத்திய நிலத்தில் உள்ள 364 மரங்களை வெட்டுவதற்கும், அதற்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நட்டு, ஐந்து ஆண்டுகள் வரை பராமரிக்க, கோவில் நிதியில் இருந்து நிதி ஒதுக்க, கோவில் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாற்று மலைப்பாதை, 19 மீ., அகலத்தில், 2 கி.மீ.,க்கு நெடுஞ்சாலை துறையினர் அமைக்க உள்ளனர். ஜனவரி மாதத்தில் துவக்கி, ஓராண்டில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.