மர்ம காய்ச்சல் பாதிப்பால் தொழிலாளி உயிரிழப்பு...ஏடூரில் அதிர்ச்சி: மூன்று நாட்களில் 40க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் கிராமத்தில், மூன்று நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலால், கிராமவாசிகள் தவித்து வருகின்றனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், அரசு தரப்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யாததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் படையெடுத்து வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே ஏடூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் பாளையம் மகன் சுரேஷ், 46; விவசாய கூலி தொழிலாளி. இவர், கடந்த வாரம் தொடர் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார்.இதையடுத்து, கடந்த 31ம் தேதி கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை சிகிச்சைக்காக சென்றார். அவரது உடல் நிலை மோசமானதால், அன்று மதியமே, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாயிலாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். அன்று மாலை, சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.அவரை தொடர்ந்து, மூன்று நாட்களாக ஏடூர் கிராமத்தில், 40க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து உயிரிழந்த சுரேஷின் சகோதரர் சுபேஷ் கூறியதாவது:என் சகோதரர் உயிரிழப்புக்கு பின், ஏடூர் கிராமத்தில் மர்ம காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. சிறப்பு மருத்துவ முகாமை அரசு மேற்கொள்ளாததால், துராபள்ளம் பஜார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்.வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 5 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனை சென்றுவர முடியாத நிலையில் தவித்து வருகிறோம். உடனடியாக, ஏடூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமை அரசு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கிராமபுற சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக, ஆண்டுதோறும் மத்திய - மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய போதிலும், ஏடூர் கிராமத்த்தில் பரவும் மர்ம காய்ச்சலை தடுக்க முடியாத நிலையில், தமிழக அரசின் துறைகள் உள்ளன.ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காய்ச்சல் பரவலுக்கு காரணம். மேலும் தாமதப்படுத்தாமல், உடனடியாக மருத்துவ முகாம் மற்றும் சுகாதார பணிகளை முழுமையாக மேற்கொண்டு, காய்ச்சல் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மூன்று நாட்களாக, ஏடூர் ஊராட்சியில் இருந்து தினமும் 15க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் சிகிச்சை பெற வருகின்றனர். சிலருக்கு, 'டெங்கு' காய்ச்சல் அறிகுறியாக, ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளரிடம் உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.மருத்துவர்,தனியார் மருத்துவமனை,துராபள்ளம்.ஏடூர் கிராமத்தில், 10 நாட்களுக்கு முன் காய்ச்சல் பரவிய போது, சுகாதார மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் பரவுவதாக தற்போது தகவல் கிடைக்க பெற்றோம். உடனடியாக, மீண்டும் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து, காய்ச்சல் பரவல் தடுக்கப்படும்.சுகாதார ஆய்வாளர்,கும்மிடிப்பூண்டி.