கால்வாய் அடைப்பை உபகரணம் இல்லாமல் அகற்றிய தொழிலாளர்கள்
திருவள்ளூர்:கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை பாதுகாப்பு உபகரணம் இன்றி ஊழியர்களே அகற்றினர்.திருவள்ளூர் பஜார் வீதியில் காய்கறி சந்தை அமைந்துள்ளது. மேலும், கொண்டமாபுரம் தெரு, குளக்கரை தெரு, பஜார் வீதி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வடக்கு ராஜவீதி வழியாக, ஈக்காடு சாலை சந்திப்பில் சேர்கிறது. இந்த கால்வாய் துார் வாரப்படாததால், வடக்கு ராஜவீதி சாலையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் அச்சாலையில் தேங்கி துர் நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள கடைக்காரர்கள், சாக்கடை அடைப்பை துார் வார நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், நகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் அடைப்பை அகற்றாததால், கடைக்காரர்கள் அதிருப்தியடைந்தனர்.பின், காய்கறி சந்தையில் தினக்கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களை பயன்படுத்தி, நேற்று கழிவு நீர் கால்வாய் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கையில் கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணம் இன்றி, அடைப்பை அகற்றினர்.