இளைஞர்களுக்கு உபகரணங்கள் சேருவதில்லை மாவட்ட அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா?
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்துார், திருவாலங்காடு, மீஞ்சூர் உட்பட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன.இங்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த, கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.'ஒவ்வொரு ஊராட்சியிலும் விளையாட்டு மன்றம் அமைக்க வேண்டும். ஊராட்சி தலைவர், செயலர், வி.ஏ.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உறுப்பினராக இருக்க வேண்டும்.ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள இளைஞர்கள், தங்களை ஊராட்சி குழு உறுப்பினர்களாக பதிவு செய்து, விளையாட்டு உபகரணங்களை பெற்று பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சி மேற்கொண்ட பின், உபகரணங்களை முறையாக ஒப்படைக்க வேண்டும்' என, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.ஆனால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், விளையாட்டு உபகரண தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதா? பயன்படுத்தப்படுகிறதா, இளைஞர் ஆர்வமுடன் வாங்கி பயிற்சி பெறுகின்றனரா, ஊராட்சி அளவில் அமைக்கப்பட்ட விளையாட்டு மன்றம், குழுக்களின் செயல்பாடு எப்படி என்பது குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை.எனவே, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, திருவள்ளூரைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் வினாயகம் கூறியதாவது:விளையாட்டு உபகரணம் பெற்ற ஊராட்சிகள் பெரும்பாலானவை, அவற்றை பயன்படுத்தாமல் வைத்துள்ளன. மீதமுள்ள ஊராட்சிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு அப்படியே தொகுப்பை வழங்கியுள்ளளன.விளையாட்டு மைதானங்கள் இருந்தும், சில ஊராட்சிகள் அவற்றை பராமரிக்காமல் அப்படியே விட்டுள்ளன. பள்ளிக்கு வழங்கப்படும் உபகரணம் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக, சில இடங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறுகையில், 'கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.