தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி
தாம்பரம், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26. நேற்று மதியம், தாம்பரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில், முடிச்சூர் நோக்கி சென்றார். முடிச்சூர், மதனபுரம் அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த விக்னேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்து, லாரி ஓட்டுநர் வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி தப்பினார். போலீசார் விக்னேஷின் உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.