காவலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு நிபந்தனை ஜாமின்
சென்னை: நொளம்பூர் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றியவரிடம், மதுபோதையில் வந்த நான்கு பேர் பீடி கேட்டு தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்தவர், கடந்த செப்டம்பரில் மருத்துவமனையில் உயிரிழந்தார். விசாரித்த நொளம்பூர் போலீசார், சின்ன நொளம்பூரைச் சேர்ந்த அஜித் உள்ளிட்டோரை செப்., 6ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். ஜாமின் கோரி அஜித் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அஜித் நிரபராதி என்றும், முன்விரோதம் காரணமாக பொய் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் எம்.காமேஷ் வாதிட்டார். போலீஸ் தரப்பில், வேறு வழக்குகள் இல்லையென்றாலும், விசாரணை முடியாததால் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அம்பத்-துார் நீதிமன்றத்தில் தலா, 25 ஆயிரம் ரூபாய்க்கு இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:30, மாலை 5:30 மணிக்கு நொளம்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; சாட்சிகள், ஆதாரங்களை கலைக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.