திருவாரூர்: நில அபகரிப்பு புகார் உள்ளிட்ட புகார்களின்பேரில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சி பதவிகளில் இருந்த தி.மு.க.,வினர் குறுநில மன்னர்களாக வலம் வந்தனர். தற்போது ஆட்சி மாறிய நிலையில், கடந்த ஆட்சியில் உள்ளாட்சியில் 'கோலோச்சிய' பஞ்சாயத்து, யூனியன் தலைவர்களின் புகார்களும் தூசி தட்டப்படுகிறது. முதல் அதிரடியாக, திருச்சி மணிகண்டம் தி.மு.க., யூனியன் தலைவர் செங்குட்டுவன் பதவி பறிக்கப்பட்டது. நீதிமன்ற தடையாணை பெற்று தற்போது அவர் பதவியில் நீடிக்கிறார். இதேபோல, மாநிலம் முழுவதும் தி.மு.க., உள்ளாட்சித்தலைவர்களின் பாயவிருக்கும் நடவடிக்கையின் ஒருகட்டமாக, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., பஞ்சாயத்துத் தலைவி ஒருவர் கையாடல் புகாரில் சிக்கியுள்ளார். திருவாரூர் மாவட்டம் கொராடாச்சேரி பஞ்சாயத்து யூனியன், பெருந்தரைக்குடி பஞ்சாயத்துத் தலைவியாக, தி.மு.க.,வை சேர்ந்த வசந்தா பதவி வகிக்கிறார். துணைத்தலைவராக தியாகராஜனும், பஞ்சாயத்து உதவியாளராக மதுசூதனனும் உள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து, கடந்தாண்டு செப்., மாதம் 24ம் தேதி முதல் 2011 ஏப்., 6ம் தேதி வரை கிராம பஞ்சாயத்து பணம் 10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்துள்ளனர். குறிப்பாக, அப்போது கொராடாச்சேரி பி.டி.ஓ.,வாக இருந்த மோகன் (தற்போது திருப்பூரில் பணிபுரிகிறார்) கையெழுத்தை போலியாக போட்டு இவர்கள் கையாடல் செய்திருப்பது தணிக்கையின் மூலம் அம்பலமானது. இதுகுறித்து, தற்போதைய கொராடாச்சேரி பி.டி.ஓ., பொன்னியின் செல்வம், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணவளாளன் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருக்கும், தி.மு.க., பஞ்சாயத்துத் தலைவி உட்பட மூவரையும் தேடி வருகின்றனர்.