பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வீரனார் கோவிலில் தமிழ்நாடு தெய்வீக தமிழ்புரட்சி பாசறையின் விநாயகர் சதுர்த்தி விழாவில் 51 விநாயகர் சிலைகளுடன் சமுதாய சமத்துவ விநாயகர் ஊர்வலம் நடத்துவது பற்றி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் பாலசந்தர் வரவேற்றார், தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநில பொருளாளர் சூரை திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிமதனகோபால், ஆத்ம ராமலிங்கம், தெட்சணாமூர்த்தி, ஜெயபால், தியாகு, இன்பராஜ், ஜெயக்குமார் உள்பட பாசறை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு: விநாயகர்சதுர்த்தி விழாக்குழு தலைவராக பாசறையின் மாநில தலைவர் உதயக்குமார், கவுரவதலைவர் வேதாசலம், செயலாளர் மற்றும் சட்ட ஆலோசகர் வக்கீல் மணிகண்டன் ஆகியோரை உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் தேர்ந்தெடுப்பது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை ராஜபாளையம், காளியம்மன் கோவில் தெரு, நேருநகர், பூக்கொள்ளை வீர விநாயகர் ஆலயம், ஆதித்தெரு, கோட்டைக்குளம், மேல்தெரு உள்பட நகரின் முக்கிய 17 இடங்களில் மூன்று அடி முதல் எட்டு அடிவரை உயரம் உள்ள காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் பூஜை, அபிஷேகம், ஆன்மீக சொற்பொழிவு, கோலப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் ஒன்பது நாள் நடத்துவது.விழாக்களில் மாணவ, மாணவியரை பெற்றோர்களுடன் பங்கேற்க செய்து மக்களிடம் தெய்வ பக்தியுடன், தேசபக்தியையும் வளர்க்கும் விதமாக விழாவை நடத்துவது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திங்கட்கிழமை மாலை காசாங்குளம் சிவன் கோவிலில் இருந்து 51 விநாயகர் சிலைகளுடன் சமுதாய சமத்துவ விநாயகர் ஊர்வலம் கரகாட்டம், தப்பாட்டம், பேண்டு வாத்தியத்துடன் புறப்பட்டு காசாங்குளம் வடகரை, கீழ்கரை, சப்பையாபிள்ளை தெரு, சின்னையாதெரு, மணிக்கூண்டு, காந்தி சிலை, அண்ணாசிலை, ஆண்கள் பள்ளி சாலை, சின்னையாத்தெருஉள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து இரவு ஏழரை மணியளவில் காசாங்குளத்தில் விசர்ஜன நிகழ்ச்சி நடத்துவது. ஊர்வலத்திற்கு சர்வ கட்சிபிரதிநிதிகள், அனைத்து சமுதாய தலைவர்களை அழைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.