உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விதி மீறும் வின்பாஸ்ட் நிறுவனம் மண் எடுப்பதால் அரசுக்கு இழப்பு

விதி மீறும் வின்பாஸ்ட் நிறுவனம் மண் எடுப்பதால் அரசுக்கு இழப்பு

துாத்துக்குடி : வியட்நாம் நாட்டை சேர்ந்த, 'வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட்' நிறுவனம், தமிழகத்தில், 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் கட்டமாக, 4,000 கோடியில், மின்சார கார், பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை துாத்துக்குடியில் துவங்குவதாக அறிவித்தது.தமிழக அரசு, துாத்துக்குடி சில்லாநத்தம் கிராமத்தில், சிப்காட் -2 தொழில் பூங்கா வளாகத்தில், 406.57 ஏக்கர் நிலத்தை அந்நிறுவனத்துக்கு ஒதுக்கியது. பிப்., 25ல், வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது ஆலை கட்டுமான பணி நடக்கிறது.நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கட்டுமான பணிகளுக்காக, விதிமீறி, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சரள் மண் அள்ளப்படுகிறது. பட்டா நிலமாக இருந்தாலும், அதில் மண் எடுக்க கனிம வளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், நிறுவனம் துவங்க ஒதுக்கப்பட்ட நிலத்தில், வின்பாஸ்ட் விதிமீறி, சரள் மண் எடுத்து வருவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் கூறியதாவது:வின்பாஸ்ட் நிறுவனம், அரசின் எந்த அனுமதியும் இல்லாமல், தொழிற்சாலை கட்டுமான பணிக்காகவும், நிலங்களை சமன்படுத்தவும் சரள் மண் எடுக்கிறது. மண் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகத்திடமும், கனிம வளத்துறையிடமும் எவ்வித முன் அனுமதியையும் இந்நிறுவனம் பெறவில்லை. இரவு, பகல் என, 10க்கும் மேற்பட்ட இயந்திரங்களால் நுாற்றுக்கணக்கான லாரிகளில், 15 ஏக்கரில் சரள் மண் கொள்ளை நடக்கிறது. சரள்மண் கொள்ளையை தடுக்க கனிம வளத்துறையோ, தாசில்தாரோ முன்வரவில்லை. இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய ராயல்டி, கனிம கட்டணம் என, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.இதேபோல், 2009ல் துாத்துக்குடி துறைமுக நிர்வாகம் எந்தவித அனுமதியும் இல்லாமல் மண் எடுத்தது. அப்போதைய கலெக்டர் பிரகாஷ் உடனடியாக ஆய்வு செய்தார். விதி மீறி செயல்பட்ட துறைமுக நிர்வாகத்துக்கு, அவர், 1.77 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். அதேபோல், தற்போதும் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து, அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தாசில்தார் கடிதம்

வின்பாஸ்ட் மீதான புகாரை தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு செய்து, தாசில்தாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை அடிப்படையில், ஒட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், துாத்துக்குடி மாவட்ட புள்ளியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'சில்லாநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, தொடர்ந்து சரள் மண் அள்ளப்படுகிறது' என, தெரிவித்துள்ளார். இதுதொடர்பான நகல், கலெக்டருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ