| ADDED : ஏப் 28, 2024 02:31 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் சரக்கு கையாளும் தொழிலாளர் குழுமம் தனியாக செயல்பட்டு வந்தது. இதில், 1600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். 2016ம் ஆண்டு சரக்கு கையாளும் தொழிலாளர் குழுமம், துாத்துக்குடி துறைமுக நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டது.சரக்கு கையாளும் தொழிலாளர் குழுமத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பென்ஷனாக 20,000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது. இறந்த ஊழியர்களின் பென்ஷன் தொகை குறித்த கணக்கு, துறைமுக அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது.இதற்கிடையே, இறந்த சில ஊழியர்கள் குறித்த விபரத்தை துறைமுக நிர்வாகத்துக்கு தெரிவிக்காமல் அதிகாரிகள் சிலர் மறைத்து உள்ளனர். மேலும், அதற்கான பென்ஷன் தொகையை மொத்தமாக வேறு வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர்.அந்த வகையில், 8 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, துறைமுகத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளனர். இந்த மோசடியில் துறைமுக உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.மோசடி குறித்து துறைமுக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:துறைமுகத்தில் பணியாற்றி இறந்த ஊழியர்கள் 20 பேர், தற்போது உயிருடன் இருப்பது போல கணக்கு காட்டி, முழு பென்ஷன் தொகையையும் மோசடியாக பெற்றுஉள்ளனர். ஐந்து ஆண்டுகளாக பென்ஷன் பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வகையில், 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.