2.40 கோடி டன் சரக்கு கையாண்டு துாத்துக்குடி துறைமுகம் சாதனை
துாத்துக்குடி: துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு கோதுமை உட்பட உணவு பொருட்கள், ரெடிமேட் ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், அவுரி இலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல, பல்வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி, பருப்பு வகைகள், பழங்கள், ரசாயன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.ஆண்டுதோறும் துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் சரக்குகளின் அளவு அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை, 2.40 கோடி டன் சரக்குகளையும், 4 லட்சத்து, 64,060 கன்டெய்னர் பெட்டிகளையும் துறைமுகம் கையாண்டுள்ளது.கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், 2.37 கோடி டன் சரக்குகளும், 4 லட்சத்து, 36,761 கன்டெய்னர்களும் கையாளப்பட்டிருந்தன. அதை ஒப்பிடுகையில், வ.உ.சி., துறைமுகம் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில், 3.61 சதவீத வளர்ச்சியையும், கொள்கலன் போக்குவரத்தில், 6.25 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது என, துறைமுக அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.