4 மாத கர்ப்பிணி தற்கொலை மகளிர் போலீஸ் மீது புகார்
துாத்துக்குடி: துாத்துக்குடி கே.வி.கே.,நகர் பகுதியை சேர்ந்தவர் சேர்மதுரை மகள் முத்தாரம்மன், 22, என்பவருக்கும்,அமுதாநகர் 2வது தெருவைச்சேர்ந்த கட்டட தொழிலாளிகிருஷ்ணபெருமாள், 27, என்பவருக்கும் மார்ச் 24ல்திருமணம் நடந்தது. 4 மாத கர்ப்பிணியான முத்தாரம்மன் நேற்று தந்தை வீட்டுக்கு வந்து திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முத்தாரம்மனின் உறவினர்கள் கூறியதாவது:திருமணம் நடந்த சில நாட்களில் இருந்தே, முத்தாரம்மனை அவரது கணவர் கிருஷ்ணபெருமாள், மாமியார் லட்சுமி மற்றும் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. கர்ப்பம் அடைந்த நிலையில் கலைத்து விடுமாறு கூறியதால் தகராறு ஏற்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். சமாதானமாக செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.அதையடுத்து, கணவர் வீட்டுக்கு சென்ற முத்தாரம்மனை கிருஷ்ணபெருமாளும், அவரது தாய் லட்சுமியும் தாக்கினர். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க சென்றோம். ஆனால், காவல் துறையினர் முறையாக விசாரிக்கவில்லை.பெற்றோர் வீட்டுக்கு வந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை கொடுமைபடுத்திய கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.