கோவில்பட்டி சிறுவன் கொலையில் உறவுக்கார ஆட்டோ டிரைவர் கைது
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த கார்த்திக் முருகன் - பாலசுந்தரி தம்பதியின் இரண்டாவது மகன் கருப்பசாமி, 11, கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்தபோது மாயமானார். மறுநாள் அருகேயுள்ள ஒரு வீட்டின் மாடியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், சிறுவன் கொலை தொடர்பாக அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, 32, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:உடல் நிலை சரியில்லாததால், வீட்டில் இருந்த சிறுவன் கருப்பசாமியை அவரது மாமா உறவு முறை கொண்ட ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட முயன்றார். மறுப்பு தெரிவித்த சிறுவனை, ஆட்டோ டிரைவர் கருப்பசாமி தாக்கியதால் மயக்கம் அடைந்தார்.இதற்கிடையே, சிறுவன் மாயமான சம்பவம் பரபரப்பானதால், கருப்பசாமியும் உடன் சேர்ந்து சிறுவனை தேடுவது போல நடித்தார். திரும்பி வந்து பார்த்தபோது சிறுவன் இறந்தது தெரிய வந்தது. மறுநாள் காலை யாருக்கும் தெரியாமல், அருகேயுள்ள ஒரு வீட்டின் மாடியில் சிறுவனின் உடலை கருப்பசாமி வீசி சென்றார். போலீசாருடன் சேர்ந்து தேடும்போது, சிறுவனின் உடல் இருந்த இடத்தை கருப்பசாமி அடையாளம் காட்டியதால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுவனை கொலை செய்தது தெரிந்தது. கைதான கருப்பசாமிக்கு டி.என்.ஏ., சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகே முழு விபரம் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.