கட்டட தொழிலாளி கொலை; உறவினர்கள் போராட்டம்
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே செண்பகப்பேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், 25; கட்டட வேலை செய்தார். நேற்று காலையில், அப்பகுதியில் உள்ள கண்மாய் கரையோரம் நின்றிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள், பாண்டியராஜனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.கொலை குறித்து நாலாட்டின்புத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:செண்பகபேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், பாண்டியராஜனுக்கும் முன்விரோதம் இருந்தது. அந்த தகராறில் சதீஷ் தன் நண்பரான மதன் என்பவருடன் சேர்ந்து பாண்டியராஜனை கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம். அவர்கள் இருவரையும் தேடி வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.உறவினர்கள் போராட்டம்:இதற்கிடையே, பாண்டியராஜன் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாண்டியராஜன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.