ரூ.5.11 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
துாத்துக்குடி:துாத்துக்குடி ராஜிவ் நகரை சேர்ந்த அகமது கான், 29, என்பவர் மின்வாரிய பணிக்கு விண்ணப்பித்தார். அதற்கான தேர்வுக் கட்டணம் 1,180 ரூபாயை துாத்துக்குடி மேலுாரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து, ஆன்லைன் மூலம் செலுத்தினார். தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் எதுவும் வராத நிலையில், மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டார்.அவர் அனுப்பிய பணம் மின்வாரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என தெரிந்தது. அதற்கு காரணமாக, வங்கியின் வரைவோலையில் தவறு இருந்தது என்பது தெரிந்தது. இதையடுத்து, சேவை குறைபாட்டை ஏற்படுத்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு எதிராக, துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அகமது கான் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் விசாரித்தனர்.பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:ஏற்கனவே ஆன்லைனில் செலுத்தப்பட்ட 1,180 ரூபாய், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை 5 லட்சம் ரூபாய், வழக்கு செலவுத் தொகை 10,000 ரூபாய் என மொத்தம், 5.11 லட்சம் ரூபாயை இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும்.இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.