மேலும் செய்திகள்
சாலையோர மணல் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு
21-Oct-2025
துாத்துக்குடி: தாமிரபரணி ஆற்றங்கரையில், மணல் திருட்டு நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், ஆற்றங்கரையில் ஆங்காங்கே பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு, அப்பகுதிகளில் ஆண்டுதோறும் வெள்ள அபாயம் அதிகரித்து வருகிறது. சில மாதங்களாக தாமிரபரணி ஆற்றில் மீண்டும் மணல் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பை சுற்றி, பட்டா நிலங்களில் எவ்வித அனுமதியுமின்றி, சட்டவிரோதமாக அதிக ஆழத்தில் குழிகள் தோண்டப்பட்டு குறுமண் திருடப்படுகிறது. ஆழ்வார்தோப்பு விவசாயிகள் சிலர், கலெக்டர் இளம்பகவத்திடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதியில் ஆழ்வார்தோப்பு, அப்பன் கோவில், மங்களக்குறிச்சி வரை, 15 ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளப்படுகிறது. மேலும், அனுமதி பெற்ற இடங்களில் விதிமுறைகளை மீறி, இயந்திரங்கள் மூலம் அதிக அளவில் மணல் அள்ளப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள உயர் நீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் விதித்த தடையை மீறி, ஆளுங்கட்சியினர் துணையோடு தினமும் இரவில், ஏராளமான லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. ஆற்றங்கரையோரம் தனியார் பட்டா நிலங்களில் எவ்வித அனுமதியுமின்றி மணல் திருடுவதால், சுற்று வட்டார விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. ஆழ்வார்தோப்பு, அதன் சுற்று வட்டாரங்களில் குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் அச்சுறுத்தலாக மணல் திருட்டு உள்ளது. தொடர்ந்து மணல் திருட்டு நடந்தால் வெள்ள காலங்களில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீசார் நிரந்தர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
21-Oct-2025