அரசு பள்ளியில் தீ விபத்து புத்தகங்கள் எரிந்து சேதம்
துாத்துக்குடி: அரசுப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் எரிந்தன. துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று காலை திடீரென புத்தகம் மற்றும் பொருட்கள் இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட அறைகளில் இருந்த பாட புத்தகங்கள், பள்ளி சீருடைகள், பேக்குகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், கம்ப்யூட்டர் டேபிள், கம்ப்யூட்டர் சேர், கலர் பென்சில், சாக்பீஸ் என, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.