கடன் கொடுத்துட்டு திரும்ப கேட்பதா? துாத்துக்குடி தி.மு.க., செயலர் மிரட்டல்
துாத்துக்குடி:வங்கிக்குள் புகுந்து மேலாளரை தாக்கியதாக, தி.மு.க., பகுதி செயலர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், 51. அமைச்சர் கீதா ஜீவன் வீடு உள்ள போல்பேட்டை பகுதி தி.மு.க., செயலர். கடற்கரை சாலையில் உள்ள யூனியன் வங்கியில் வீட்டுக்கடன் பெற்ற இவர், தவணை தொகையை சரியாக செலுத்தாமல் இருந்துள்ளார்.வங்கி மேலாளர் பாரத் வசந்த் தேசாய், 40, மற்றும் ஊழியர்கள் சிலர், ஜெயக்குமார் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று தவணை தொகை செலுத்தாதது குறித்து விசாரித்துள்ளனர். மூன்று மாத தவணையை செலுத்துமாறு வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு, பாரத் வசந்த் தேசாய் வங்கிக்கு திரும்பியுள்ளார்.மாலை 6:30 மணியளவில் வங்கிக்குள் திடீரென புகுந்த ஜெயக்குமார், அவரது சகோதரர் காமராஜ், 48, உட்பட நான்கு பேர், மேலாளரிடம் தகராறு செய்தனர். 'கடன் தொகையை திரும்ப கேட்டு வீட்டுக்கு எப்படி வரலாம்' என கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.அங்கிருந்த தீயணைப்பு சிலிண்டரால், பாரத் வசந்த் தேசாயை தாக்கிய ஜெயக்குமார், 'மீண்டும் வீட்டு பக்கம் வந்தால் வங்கிக்குள் புகுந்து கொலை செய்துவிடுவோம்' என மிரட்டி சென்றுள்ளனர். பாரத் வசந்த் தேசாய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மத்திய பாகம் போலீசார், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களால் தாக்குதல், காயம் ஏற்படும் வகையில் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.