கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து சிறிய ரக கப்பலில் மாலத்தீவு சென்ற தொழிலாளி கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். துாத்துக்குடி காந்திநகரை சேர்ந்த ஜெகதீஷ், 41, என்பவர், சக தொழிலாளர்களுடன் பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு காய்கறி ஏற்றி சென்ற சிறிய ரக சரக்கு கப்பலில், செப்.19ம் தேதி இரவு புறப்பட்டார். 22ம் தேதி இரவு கப்பல் மாலத்தீவு சென்றடைந்ததும் துறைமுகத்தின் அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. அப்போது, கப்பலில் இருந்த ஜெகதீஷ் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. கடலோர காவல் படையினர் அவரை தேடிய நிலையில், நேற்று ஜெகதீஷ் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை துாத்துக்குடி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜெகதீஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தோணி தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.