பஸ் மோதி மகள் கண் முன் தாய் பலி
துாத்துக்குடி:துாத்துக்குடி, குரூஸ்புரத்தை சேர்ந்த ஆரோக்கியவாஸ் மனைவி பிரேமலதா, 62. இவரது மகள் சமீபத்தில் வெளியான டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றார். வேம்பாரில் உள்ள பிரேமலதாவின் தாயிடம் ஆசி பெறுவதற்காக இருவரும் பைக்கில் நேற்று சென்றனர். வேப்பலோடை என்ற இடத்தில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எதிரே கார் வந்ததால் பிரேமலதா மகள் பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது, துாத்துக்குடியில் இருந்து பரமக்குடி நோக்கி சென்ற தனியார் பஸ், பைக் மீது மோதியதால், துாக்கி வீசப்பட்ட பிரேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். குளத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.