உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மியான்மரில் மூவர் தவிப்பு மீட்க கலெக்டரிடம் மனு

மியான்மரில் மூவர் தவிப்பு மீட்க கலெக்டரிடம் மனு

துாத்துக்குடி: மியான்மரில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கி தவிக்கும் மூன்று வாலிபர்களை மீட்க, அவரது உறவினர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். துாத்துக்குடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார், 26. பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் சித்திரை செல்வகுமார், 21. சிப்பிபாறையை சேர்ந்த மதன்ராஜ், 27. இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் கம்போடியா நாட்டில் வேலைவாய்ப்பு என வந்த விளம்பரத்தை நம்பி, தொடர்பு கொண்டுள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த தனியார் ஏஜென்சி ஊழியர்கள் சிலர் அவர்களிடம் பேசி, கம்போடியா நாட்டில் மாதம் 40,000 ரூபாய் சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறி, நபர் ஒருவருக்கு, 76,000 ரூபாய் கமிஷன் பெற்று, அனுப்பி வைத்துள்ளனர். மூவரும் சுற்றுலா விசாவில் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதுவரை வீட்டிற்கு தொடர்பு கொண்ட மூவரும், பின்னர் தொடர்பு கொள்ளவில்லை. இதற்கிடையே, மியான்மர் நாட்டில் ஒரு காட்டுப்பகுதியில் உள்ள பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, குடும்பத்திற்கு வாட்ஸாப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளனர். சட்டவிரோத கும்பல் தங்களை சைபர் மோசடியில் ஈடுபட கூறி கொடுமைபடுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மூவரின் பெற்றோர், உறவினர்கள் நேற்று துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், தங்கள் மகன்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ