போனசை சம்பளத்தில் பிடித்ததாக துாய்மை பணியாளர்கள் போராட்டம்
துாத்துக்குடி: தீபாவளிக்கு வழங்கப்பட்ட போனஸ் தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்ததாக கூறி, கொட்டும் மழையிலும் துாத்துக்குடியில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துாத்துக்குடி மாநகராட்சியில், 700க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்த 'அவர்லேண்ட்' என்ற தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் இவர்கள், தீபாவளி போனஸ் கேட்டு, கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்லேண்ட் நிறுவனம் ஒவ்வொருவரின் கணக்கிலும், 5,000 ரூபாய் வரவு வைத்து தீபாவளி முன்பணம் என கூறியது. மாதந்தோறும், 500 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் எனவும், அறிவிக்கப்பட்டது. துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து, 3,000 ரூபாய் போனஸ் தொகை என்றும், மீதமுள்ள 2,000 ரூபாயை மாதம், 500 வீதம் பிடித்தம் செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், துாய்மை பணியாளர்கள் சம்பளத்தில், 2,500 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறி, அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் நிர்வாகி சகாயம் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன் திரண்டனர். கொட்டும் மழையிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்லேண்ட் நிறுவனத்தினர் அவர்களிடம் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பணியாளர்கள் கலைந்து சென்றனர். மனிதாபிமானமற்ற செயல் துாய்மை பணிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி போனசாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது, மனிதாபிமானமற்ற செயல். மக்களின் சுகாதாரத்தை காப்பதற்காக பாடுபட்டுவரும் துாய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, உடனடியாக விடுவிக்க வேண்டும். - தினகரன் அ.ம.மு.க., பொதுச்செயலர்