ரூ.3.75 கோடி மதிப்புள்ள கடத்தல் சிகரெட் பறிமுதல்
துாத்துக்குடி: ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் இருந்து துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு சில நாட்களுக்கு முன் வந்த சரக்கு கப்பலில், ஒரு கன்டெய்னரில், பெங்களூரு நிறுவனத்திற்கு 'வெட் டேட்ஸ்' எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நிறுவனம் போலி என தெரியவந்ததால், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கன்டெய்னரை சோதனை செய்தனர். அதில், பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பாக்கெட் பண்டல்களும், மறுபுறத்தில் சிகரெட் பெட்டிகளும் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மொத்தம், 1,300 பெட்டிகளில் இருந்த 20 லட்சம் சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 3.75 கோடி ரூபாய்.பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி சிகரெட் தயாரிக்கப்பட்டு, கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.