| ADDED : ஜன 26, 2024 01:29 AM
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நேற்று லட்சக்கணக்கில் பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. நள்ளிரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 7:30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை 10:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார். பாதயாத்திரையாக வந்த முருக பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆனால் திருச்செந்துாரில் பல்வேறு கட்டுமான பணிகள் நடப்பதால் தடுப்பு பலகைகளால் பக்தர்கள் நெருக்கடிக்கு ஆளாகினர். மழை, வெள்ளத்தில் மிகவும் ரோடுகள் சேதம் அடைந்துள்ளதால் பாதயாத்திரை பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.