எட்டையபுரம் அருகே விபத்து நண்பர்கள் மூவர் கோர பலி
துாத்துக்குடி: திருப்பூர் மாவட்டம், அலங்கியம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 31, சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், தன் நண்பர்களான செல்வராஜ், 29, விஜயகுமார், 30, மகேஷ்குமார், 32, ராஜ்குமார், 32, ஆகியோருடன் திருச்செந்துார் கோவிலுக்கு செல்ல, மாலை அணிந்து விரதம் இருந்தனர். திருப்பூரில் இருந்து திருச்செந்துார் கோவிலுக்கு, நேற்று முன்தினம் இரவு, 'மாருதி ஆம்னி' காரில் ஐந்து பேரும் புறப்பட்டனர்; செல்வராஜ் காரை ஓட்டினார்.துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் நேற்று அதிகாலையில் அவர்கள் வந்ததும், ஓய்வுக்காக துாத்துக்குடி -- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், காரை ஓரமாக நிறுத்தினர்.அப்போது, பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதில், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில், செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மகேஷ்குமார் மற்றும் ராஜ்குமார் காயம் அடைந்தனர். மாசார்பட்டி போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு, எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மூவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டிய, துாத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார், 35, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.