உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இந்தியாவின் முதல் பசுமை துறைமுகம் துாத்துக்குடி ஆணைய தலைவர் பெருமிதம்

இந்தியாவின் முதல் பசுமை துறைமுகம் துாத்துக்குடி ஆணைய தலைவர் பெருமிதம்

துாத்துக்குடி: 'முழுமையான பசுமை துறைமுக கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் துறைமுகமாக, துாத்துக்குடி மாறியுள்ளது' என, துாத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:துாத்துக்குடி துறைமுகம் பசுமையான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது. இங்கு, 5 மெகாவாட் தரைதள சூரியமின் உற்பத்தி, 2 மெகாவாட் காற்றாலை மற்றும் 1.04 மெகாவாட் மேற்கூரை சூரிய மின்உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு மெகாவாட் தரைதள சூரிய மின் உற்பத்தி ஆலை கட்டுமானம் நடந்து வருகிறது.

65,000 யூனிட்

கடந்த நிதியாண்டில், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி வாயிலாக, 1 கோடியே 20 லட்சத்து 65,000 யூனிட் பசுமை ஆற்றலை உற்பத்தி செய்துள்ளது. இதன் வாயிலாக தோராயமாக 1 கோடியே 37,000 கிலோ கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கூரை சூரிய மின்உற்பத்தி ஆலை வாயிலாக, சூரியஒளி மின் உற்பத்தி திறனில் ஒரு மெகாவாட்டை கடந்து துாத்துக்குடி துறைமுகம் சாதனை படைத்துள்ளது.பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்ப செயல்முறை ஆலை பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதால், தொழில் நுட்ப செயல்விளக்கமாக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் முதல் இந்திய துறைமுகமாக துாத்துக்குடி விளங்குகிறது. ஒரு மணி நேரத்திற்கு 10 கன மீட்டர் பசுமை ஹைட்ரனை உற்பத்தி செய்யும் இந்த ஆலை, துறைமுக குடியிருப்பு பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தெருவிளக்குகள் மற்றும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கும் ஹைட்ரஜன் வாயிலாக மின்சாரத்தை வழங்குகிறது.பசுமை ஹைட்ரஜனை கப்பல்களுக்கு வழங்குவதற்காக சேமித்து வைக்கும் தொழில்நுட்ப செயல்முறை ஆலையும், எரிபொருள் நிரப்பும் வசதியும் துறைமுகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

ரூ.35 கோடி நிதியுதவி

இதற்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கான அமைச்சகம் 35 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளது. 750 கன மீட்டர் சேமிப்பு திறனுடன் கூடிய இந்த வசதி, 2026 ஜனவரிக்குள் முடிக்கப்படும்.இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் கடலோர பசுமை கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை காண்ட்லா மற்றும் துாத்துக்குடிக்கு இடையில் துவங்க துறைமுகம் தயாராகி வருகிறது. முழுமையான பசுமை துறைமுக கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் துறைமுகமாக துாத்துக்குடி மாறியுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை