ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடியில் இருந்து ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார
பகுதிகளுக்கு இயக்கப்படும் ஓட்டை உடைசலான டப்பா பஸ்களால் பயணிகள், மாணவ -
மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.தூத்துக்குடி மாவட்டத்தில்
மிகவும் வறட்சியான பகுதி எது என்றால் அது ஓட்டப்பிடாரம் என்று சட்டென்று
சொல்லிவிடலாம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய யூனியனாக இருக்கம்
ஓட்டப்பிடாரத்தில் குடிப்பதற்கு மட்டுமல்ல விவசாயத்திற்கு கூட தண்ணீர்
இல்லை. மழைக்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் கிராமங்கள் எல்லாம் வெள்ள
நீருக்குள் மூழ்குவதும், கோடை காலத்தில் வறட்சியில் சிக்கித்தவிப்பதும்
வாடிக்கையாகி விட்டது. தொகுதியிலுள்ள குளங்கள், குட்டைகளை எல்லாம்
தூர்வாரினால் போதும். ஆண்டுமுழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது ஆனால்
அதற்கு வழியில்லை என்று சொல்லும் வகையில் ஓட்டப்பிடாரம் உள்ளது. வீரத்தின்
விளைநிலமான ஓட்டப்பிடாரம் விவசாயப்பயிர்கள் விளைவதற்கு வழியில்லாமல் வானம்
பார்த்த வறட்சி பூமியாக காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள்
வேலையில்லாமல் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் நிலை
தொடர்கிறது.தொகுதியில் வேலைவாய்ப்பு தரும் வகையில் தொழில்நிறுவனங்கள்
இல்லை, உயர்கல்வி வசதி இல்லை, மருத்துவ வசதியில்லை, போக்குவரத்து வசதிகள்
முறையாகயில்லை என்று குறைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இத்தகைய
சூழ்நிலையில் தூத்துக்குடியில் இருந்து ஓட்டப்பிடாரம் பகுதிக்கு
இயக்கப்படும் அரசு பஸ்கள் எல்லாம் ஓட்டை உடைசலான டப்பா பஸ்களாக இருப்பதால்
பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.தூத்துக்குடி பழைய
பஸ்ஸ்டாண்டு, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓட்டப்பிடாரம், கவர்னகிரி,
ஓசநூத்து, மணியாச்சி, தட்டப்பாறை, புதியம்புத்தூர், அக்கநாயக்கன்பட்டி,
புளியம்பட்டி, சிலோன்காலனி, அல்லிகுளம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளுக்கு
அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்பட்டு
வருகிறது. தனியார் பஸ்களை விட அரசு பஸ்களின் நிலை மிகவும் மோசமான நிலையில்
உள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உட்பட்ட பல்வேறு தேவைகளுக்காக
ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் தூத்துக்குடிக்கே வருகின்றனர்.
இதனால் அலுவலக நேரமான காலை, மாலை நேரத்தில் அங்கிருந்து தூத்துக்குடி வரும்
பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு இருக்கும். இதனால் பஸ்களில் பயணிகள்
கூட்டமும் நிரம்பி வழியும். இது வாடிக்கையான நிலையில் ஓட்டப்பிடாரத்திற்கு
இயக்கப்பம் டவுன் பஸ்களால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி
வருகிறார்கள்.பார்ப்பதற்கு சில அரசு டவுன் பஸ்கள் பளிச்சிடும் வகையில்
பெயிண்ட் அடிக்கப்பட்டு ஜோராக இருந்தாலும், உள்ளே இருக்கும் இருக்கைகள்
உட்காருவதற்கு வழியில்லாமல் உள்ளது. சில பல டவுன் பஸ்கள் உடைந்து
நொறுங்கிப்போய் டப்பா பஸ்களாகவே காட்சி அளிக்கிறது.மழை பெய்தால்
பஸ்சுக்குள் குடை பிடித்தால் தான் அமரவே முடியும். இல்லாவிட்டால் நனைந்தபடி
தான் பயணிக்க வேண்டும். டப்பா பஸ்கள் ரோட்டில் செல்லும் போதும் ஏற்படும்
கடும் அதிர்வுகளால் உள்ளிருக்கும் பயணிகள் படாதபாடுபடுகின்றனர். டப்பா
பஸ்கள் அனைத்தும் பயணிகளின் கூட்டத்தால் சீரான வேகத்தில் செல்வதற்கு கூட
வழியில்லாமல் ஆமைவேகத்தில் செல்கின்றன. இதனால் தனியார் நிறுவன, அரசு நிறுவன
பணியாளர்கள், மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு செல்லமுடியாமல் நித்தம்
நித்தம் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோக வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை,
கப்பலோட்டிய தமிழர் வஉசிதம்பரனார் நினைவு இல்லத்தை பார்க்க வரும் சுற்றுலா
பயணிகளும் ஓட்டை உடைசல் பஸ்களால் படாதபாடுபட்டு
வருகின்றனர்.தூத்துக்குடியில் இருந்து ஓட்டப்பிடாரம் பகுதிக்கு
இயக்கப்படும் பெரும்பாலான டவுன் பஸ்கள் இதே நிலையிலேயே உள்ளன. டப்பா பஸ்கள்
மெதுவாக நத்தை போன்று ஊர்ந்து செல்வதால் அவசர வேலைக்காக செல்பவர்கள் நிலை
பெரும் திண்டாட்டமாகி விடுகிறது. நல்ல கலெக்ஷன் ஆன போதும் நல்ல கன்டிஷனில்
இருக்கும் புதிய டவுன் பஸ்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் இயக்கத் தயக்கம்
காட்டுவது புரியாத புதிராக இருக்கிறது.டப்பா பஸ்களை மாற்றிவிட்டு அதற்கு
பதிலாக புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்று ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார
பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் அவை
கிணற்றில் போட்ட கல் போன்று பயனில்லாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக
தொகுதியின் எம்எல்ஏ., கிருஷ்ணசாமி தலையிட்டு பயணிகள் நலன்காக்கும் வகையில்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.விடுதலை போராட்ட வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த
தேசத்தலைவர்கள் பிறந்த ஊருக்கு போவதற்கு நல்ல பஸ் கூட இல்லை என்ற ஆதங்கம்
பெரியவர்கள் மத்தியிலும் உள்ளது. விடுதலைக்காக உயிரை நீத்த தலைவர்கள்
பிறந்த ஊராக ஓட்டப்பிடாரம் தொகுதியின் நிலை வருங்காலங்களிலாவது வளர்ச்சி
பெற்று மாற்றம் காணும் வகையில் வளமை பொங்குமா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம். முதலில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பழைய டப்பா
பஸ்களுக்கு டாடா சொல்லிவிட்டு வணக்கம் சொல்லி வரவேற்கும் வகையில் புதிய
டவுன் பஸ்களை இயக்கட்டும் என்றும் சொல்லும் நேரத்தில் இதுவே பயணிகள்,
மாணவ-மாணவிகளின் ஒட்டுமொத்த விருப்பமாகும்.பஸ் பயணத்தில் மிரண்டுகதறி அழும்
குழந்தைகள்ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிக்கு இயக்கப்படும் டப்பா
பஸ்கள் ரோட்டில் செல்லும் போது ஹாரனே தேவையில்லை. பஸ்சின் லொட லொட கடகட
சத்தத்தை கேட்டே முன்னால் செல்பவர்கள் விலகிக்கொள்கின்றனர். மேலும் டப்பா
பஸ்களில் இருந்து வெளிவரும் கடுமையான அதிர்வுகளால் கைக்குழந்தைகள் மிரண்டு
போய் பயந்து அழும் சம்பவங்களும் தொடர்கதையாக நடந்து வருகிறது. டப்பா
பஸ்களில் ஏறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி
பெண்கள் மற்றும் முதியவர்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.