டாஸ்மாக் பாரில் இருவர் வெட்டி கொலை குடும்ப தகராறில் தொழிலாளி கொடூரம்
துாத்துக்குடி: டாஸ்மாக் மதுக்கூடத்தில் மது குடித்துக் கொண்டிருந்த உறவினர்கள் இருவரை, வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய தொழிலாளியை, போலீசார் தேடுகின்றனர். துாத்துக்குடி மாவட்டம், காப்புலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 60, விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் மந்திரம், 50, விவசாயி. உறவினர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு தளவாய்புரம் பகுதியில் உள்ள மதுபான கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற, அதே ஊரை சேர்ந்த கோமு, 61, என்பவர், 'என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டு, இருவரும் ஜாலியாக மது குடிக்கிறீர்களா...' என, ஆவேசத்துடன் கேட்டு, இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பினார். ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்த இருவரில் முருகன், மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மந்திரம், நேற்று அதிகாலை உயிரிழந்தார். கயத்தாறு போலீசார் தப்பியோடிய கோமுவை தேடுகின்றனர். போலீசார் கூறியதாவது: கொலையான முருகனின் சகோதரி தங்கத்தாய் என்பவரை, கோமு திருமணம் செய்துள்ளார். மற்றொரு சகோதரியை, கொலையான மந்திரம் திருமணம் செய்துள்ளார். ஒரு கொலை வழக்கில் கைதான கோமு, 12 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு சில மாதங்களுக்கு முன் விடுதலையாகி வந்தார். அவர், அடிக்கடி மது குடித்து மனைவி தங்கத்தாய், மகன் மாடசாமியுடன் தகராறு செய்ததால், அவர்கள் வெளியூர் சென்று விட்டனர். இதற்கு முருகனும், மந்திரமும் தான் காரணம் என கோபத்தில் இருந்த அவர், மனைவி இருக்கும் இடத்தை கேட்டு அவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இது தொடர்பான தகராறில் தான் இரட்டை கொலை நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.