யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், அவரது மகன் அகிராந்தனுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:10 ஆண்டிற்கும் மேலாக முருகனை தரிசனம் செய்ய ஆசைப்பட்டேன். பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்தது தற்போது முழுமையாக நிறைவேறி இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். தமிழகத்திற்கும், தேசத்திற்கும் நல்லது நடக்கட்டும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களில் 15 ஆண்டுகளுக்கு முன் வந்துள்ளேன். அரசியலுக்கு வந்த பின் கோவிலுக்கு வர முடியவில்லை. முருகனை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.த.வெ.க., தலைவர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோதே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். தமிழக அரசியலில் யார் வந்தாலும் சரி நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோசம். இவ்வாறு அவர் கூறினார்.