ரூ.4.41 கோடியில் நலத்திட்ட உதவிகள்
திருப்பூர்; தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று நடந்த விழாவில், துாய்மை பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்றும் 'உன்னத திட்டம்' துவக்கி வைத்து, நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கினார். திருப்பூரில், வித்யா கார்த்தி மண்டபத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா, தையல் இயந்திரம்,துாய்மை பணியாளர் நலவாரியம் சார்பில் துாய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணைகள் என, பல்வேறு துறைகள் சார்பில், 301 பயனாளிகளுக்கு, மொத்தம், 4.41 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் கயல்விழி, சாமிநாதன் ஆகியோர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, மேயர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.