உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அண்ணனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம் பாசக்கார தம்பி எண்ணுகிறார் கம்பி

அண்ணனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம் பாசக்கார தம்பி எண்ணுகிறார் கம்பி

அவிநாசி:தள்ளிவிட்டதில் பலியான தன் அண்ணனின் உடலை, துண்டு துண்டாக வெட்டி குளம் மற்றும் கிணற்றில் வீசிய, 'பாசக்கார' தம்பியை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே காளிபாளையம் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி, 54. இவரது சித்தப்பா மகன், அவிநாசி, நேரு வீதி விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 43. கோவிந்தசாமி கடந்த 20ம் தேதி மாயமானதாக, அவரது மகன் பிரவீன்குமார் அவிநாசி போலீசில் புகார் அளித்தார்.சந்தேகத்தில், ரமேஷிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்ததில், சொத்து பிரிக்கும் பிரச்னை இருந்து வந்ததால், கோவிந்தசாமியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, தொரவலுார் குளத்திற்குள்ளும், தலையை அனந்தகிரியில் உள்ள கிணற்றிலும் மூட்டை கட்டி வீசியது தெரிந்தது.போலீசார் கூறியதாவது:சொத்து பிரிப்பது தொடர்பாக, கடந்த 18ம் தேதி கோவிந்தசாமியை தன் வீட்டுக்கு ரமேஷ் வரவழைத்துள்ளார்.இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கைகலப்பானதில் கோவிந்தசாமியை, ரமேஷ் கீழே தள்ளி உள்ளார். தலையில் பலமாக அடிபட்டதில், கோவிந்தசாமி அதே இடத்தில் இறந்தார். யாருக்கும் தெரியாமல் கோவிந்தசாமி உடலை அப்புறப்படுத்த ரமேஷ் திட்டமிட்டுள்ளார்.கோவிந்தசாமியின் உடலை மூட்டையாக கட்டி, காரில் கொண்டு சென்ற ரமேஷ், கருவலுார் அருகே அனந்தகிரியில் தனக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வைத்து கைகள், கால்கள், தலை என, துண்டு துண்டாக உடலை வெட்டி உள்ளார். உடல் பாகங்களை சாக்குப் பைகளில் திணித்து, டூ - வீலரில் வைத்து அங்கிருந்து, 25 கி.மீ., தொலைவில் உள்ள தொரவலுார் குளத்தில் வீசியுள்ளார்.நேற்று தொரவலுார் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் மூட்டை ஒன்று கரையில் ஒதுங்கி உள்ளதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல் அளித்தனர்.அங்கு சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் கோவிந்தசாமி உடல் பகுதி மட்டும் இருந்தது. அனந்தகிரியில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தலை மீட்கப்பட்டது. கை, கால்கள் கிடைக்கவில்லை. அவற்றை தேடி வருகிறோம். சொத்து தகராறு தான் காரணமா, வேறு ஏதாவது பிரச்னையா என, தொடர்ந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ