உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / என்.எச்., ரோட்டின் மீது மருத்துவமனை நுழைவாயில் நோயாளிகளுக்கு காத்திருக்கும் அச்சுறுத்தல்

என்.எச்., ரோட்டின் மீது மருத்துவமனை நுழைவாயில் நோயாளிகளுக்கு காத்திருக்கும் அச்சுறுத்தல்

பல்லடம்;தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பல்லடம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில், நோயாளிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. விபத்து அவசர சிகிச்சை உட்பட, கர்ப்பிணிகள், குழந்தைகள் பிரிவு, கண் காது மூக்கு சிகிச்சை, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. தினசரி, 700க்கும் அதிகமான புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதன் காரணமாக, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மட்டுமின்றி, அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் கூடுவதால், பெரும்பாலும், அரசு மருத்துவமனை, வாகனம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இவ்வாறு மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், பொதுமக்களுக்கு, மருத்துவமனையின் நுழைவு வாயில், விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே மருத்துவமனையின் நுழைவுவாயில் உள்ளது. அதுவும், நுழைவாயிலின் உள்ளே செல்லும் இடத்தில், ரோடு மட்டத்தில் இருந்து, ஏறத்தாழ இரண்டடி உயரத்துக்கு சிமெண்ட் சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளே இருந்து வரும் வாகனங்கள் மட்டுமன்றி, வெளியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களும் தடுமாறி செல்வதால், விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. சிமென்ட் சிலாப் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், மேலே ஏற முடியாமல், விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் தடுமாறி செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள நுழைவாயிலை சற்று உட்புறமாக தள்ளி அமைக்க வேண்டும். உயரமாக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்பை தாழ்வாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நோயாளிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ