செல்வ நலம் தந்தருளும் ஆதிகேசவப்பெருமாள்
பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் விழா, 28ம் தேதி நடக்கிறது. உத்தமசோழன் கட்டிய உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் சிற்பம், நரசிம்ம பெருமாள், ஆஞ்சநேயர் சிற்பங்கள் அனேக இடங்களில் உள்ளன. அதே காலகட்டத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கும் தனி கோவில் எழுப்பி, மன்னர்கள் வழிபட்டுள்ளனர்.பெருமாள் கோவில் முழுவதும் சேதமானதால் 2006ல், புதிதாக கோவில் கட்டப்பட்டது. சிவாலயத்துக்கு எதிர் தென்புறம், கிழக்கு நோக்கி, பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சாலகோபுரம், ஒருநிலை ராஜகோபுரத்துடன் கோவில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. முன்மண்டபத்தில் உள்ள எட்டு துாண்களில், பத்து அவதாரங்களை விவரிக்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜயன், விஜயன் துவாரபாலகராக காவல்புரிய, கர்ப்பகிரகத்தில், தேவியருடன் நம்பெருமாள் அருள்பாலிக்கிறார். கர்ப்பகிரக வெளிப்புற சுவரில், தன்வந்திரி, ஹயக்ரீவர், சத்தியநாராயணர், நரசிம்மர், விஷ்ணுதுர்க்கை அருள்பாலிக்கின்றனர். தென்மேற்கு மூலையில், யோகநரசிம்மருடன் கூடிய சக்கரத்தாழ்வாரும், வடமேற்கில் ஆண்டாள் நாச்சியாரும் தனி சன்னதி கொண்டுள்ளனர். கோவிலின் வடபுறம், பெருமாளை சேவித்தபடி, விஸ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் காட்சியளிக்கின்றனர். ஆதிகேசவ பெருமாள் கோவிலின் சிறப்பை கூட்டும் விதமாக, வடகிழக்கு பாகத்தில், பஞ்சமுக ஆஞ்சநேயர் நின்றகோலத்தில் தெற்குநோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறார். வேறு எங்கும் இல்லாதபடி, அபயகரம், தண்டாயுதம் தாங்கி, 12 கரங்களுடன் சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார்.ஆஞ்சநேயர், நரசிம்மம், ஹயக்ரீவம், வராகம் என, நான்கு முகங்கள் தெற்கு நோக்கியும், கருடமுகம், தலைக்கு பின்புறம் வடக்கு நோக்கியும் காணப்படுகிறது. திருப்பணி நிறைவுற்று, வண்ணமயமான, பூலோக வைகுண்டம் போல் கோவில்கள் காட்சிகொடுக்கின்றன. ---பெருமாநல்லுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில்பஞ்சமுக ஆஞ்சநேயர்