உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதார வசதி இல்லாத அங்கன்வாடி; நடவடிக்கை எடுப்பதில் பேரூராட்சி அலட்சியம்

சுகாதார வசதி இல்லாத அங்கன்வாடி; நடவடிக்கை எடுப்பதில் பேரூராட்சி அலட்சியம்

உடுமலை : அடிப்படை கழிப்பறை வசதி இல்லாமல், இயற்கை உபாதைகளை கழிக்கவும் சில துாரம் செல்ல வேண்டிய அவலநிலையில், தளி அங்கன்வாடி குழந்தைகள் உள்ளனர்.உடுமலை அருகே தளி பேரூராட்சியில், இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒன்று, அரசு பள்ளி வளாகத்திலும் மற்றொன்று, நந்தவன வீதியிலும் உள்ளது.நந்தவன வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் வீதம் பராமரிக்கப்படுகின்றனர்.இத்தனை குழந்தைகளுக்கும், ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளது.இங்கு தான், குழந்தைகளுக்கான சமையலும் நடக்கிறது. குழந்தைகள் விளையாடுவதற்கும் அதே அறைதான் பயன்படுத்தப்படுகிறது.இந்த மையத்தில், அடிப்படையான கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லாததால், குழந்தைகளுக்கு அருகில் உள்ள திறந்த வெளியிலும், சிறிது துாரத்தில் உள்ள பொது கழிப்பறைக்கும் செல்கின்றனர்.மையத்தில் பணிசெய்பவர்களும், பொது கழிப்பறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டாயம் தேவை எனவும், பள்ளிகளில் சுத்தமான கழிப்பிடம் இருக்க வேண்டுமெனவும் கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகள் வாயிலாக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ஆனால், இதுபோன்ற எந்த திட்டமும், இந்த அங்கன்வாடி மையத்தில் செயல்படுத்தப்படவில்லை. குழந்தைகளின் அவசர தேவைக்கும் கூட பயன்படுத்த கழிப்பறை வசதி இல்லாமல், பல ஆண்டுகளாக இந்த அவலநிலை தொடர்கிறது.இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் போவது, கழிப்பறை துாய்மையான இடத்தில் இல்லாதது உள்ளிட்டவற்றால், குழந்தைகள் பல தொற்றுக்கு ஆளாகும் சூழலும் அதிகம் உள்ளது.அப்பகுதி மக்கள் அனைவரும் பயன்படுத்தும் பொது கழிப்பறையை, அங்கன்வாடி குழந்தைகளும் பயன்படுத்தும் வகையில் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பள்ளியிலுள்ள அங்கன்வாடி மையம் தொலைதுாரமாக இருப்பதால், நந்த வன வீதி பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதி பெற்றோர், இந்த அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.பேரூராட்சி நிர்வாகம், குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதார வசதியை முறையாக செய்யாமல் உள்ளது.சமூக நலத்துறை அதிகாரிகளும், இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல், அங்கன்வாடி மையம் தொடர்ந்து இதே நிலையில் செயல்படுகிறது.குழந்தைகளுக்கு சுகாதாரமான சூழலை ஏற்படுத்த, அடிப்படை கழிப்பறை மற்றும் இட வசதியுடன் உள்ள வேறு கட்டடத்துக்கு அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை