அவிநாசி நகராட்சியாக கருத்துக்கேட்பு பேரூராட்சி சிறப்புக்கூட்டம் நடக்கிறது
அவிநாசி:அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக பேரூராட்சி கவுன்சிலர்களிடம் கருத்துக் கேட்டறிய சிறப்புக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அவிநாசி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் விவாதம்:தங்கவேலு (தி.மு.க.,): - சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில், மனமகிழ் மன்றம் எப்போது இடம் மாற்றம் செய்யப்படும் என உறுதியாக தெரிவிக்க வேண்டும். சூளை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீரால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): கைகாட்டிப்புதுார் பூங்காவை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டும். பூங்கா கேட், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்து பழுதாகி உள்ளது. ஈரோடு ரோட்டில் உள்ள உரப்பூங்காவில், பேரூராட்சி முழுவதும் சேகரிக்கும் குப்பை கொட்டப்பட்டுள்ளது. வேறு இடத்தில் கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.தலைவர்: மனமகிழ் மன்றம் விரைவில் இடம் மாற்றப்படும். சூளை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒரே வார்டு பகுதியில் அல்லாமல், சாலையப்பாளையம் உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளிலும் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.முன்னதாக, அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு, நகர பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம் குறித்து கவுன்சிலர்களின் கருத்து கேட்கப்பட்டது. சில வார்டு கவுன்சிலர்கள் வராததால் சிறப்பு கூட்டம் நடத்தி கருத்து கேட்பது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.----அவிநாசி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் மேற்கொண்டனர்.
தெருநாய்கள் கட்டுப்படுத்த எவ்வளவு தொகை?
'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டிய கவுன்சிலர்கவுன்சிலர் திருமுருகநாதன் (தி.மு.க.,) பேசியதாவது:அவிநாசியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த வாரம், கச்சேரி வீதியில் இரண்டரை வயது குழந்தையை தெரு நாய் கடித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நிதியை ஒதுக்குவதாகவும், ஆனால் பேரூராட்சியில் அதை செயல்படுத்துவதில்லை எனவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் 'தினமலர்' நாளிதழில் சுட்டிக் காட்டியுள்ளனர். பேரூராட்சிக்கு, இதுவரை நாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக எவ்வளவு தொகை வந்துள்ளது என வெளிப்படையாக சொல்ல வேண்டும். நாய்களால் பெரியளவில் விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பர்ஹத்துல்லா (தி.மு.க.,) பேசுகையில்,''தெரு நாய்கள் நடந்து மற்றும் டூவீலரில் செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கிறது. நாய்களை பார்த்தாலே, குழந்தைகள், பெரியவர்கள் பயப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.