உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசுப்பணி லட்சியம்; பெண்கள் முனைப்பு

அரசுப்பணி லட்சியம்; பெண்கள் முனைப்பு

வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு வகையில் கல்விதான். அதுவும், பள்ளி படிப்பு முடித்து, கல்லுாரி படிப்பு கடந்து, வேலை வாய்ப்பு என்ற நிலை வரும் போது தான், பலரும், பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். தற்போதைய போட்டி நிறைந்த உலகில் ஏழை, நடுத்தர குடும்பப் பிள்ளைகளுக்கு, அரசுப்பணி என்பது தான் நம்பிக்கை.அவர்களுக்கு வழிகாட்டியாக மாறியிருக்கிறது, திருப்பூர் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். இம்மையத்தின் சார்பில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், போட்டி தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.திருப்பூர் மட்டுமின்றி பல்லடம், அவிநாசி, காங்கயம், உடுமலை என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், போட்டி தேர்வெழுத விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இங்கு பயிற்சி பெற வருகின்றனர்.கடந்த முறை நடந்த குரூப் - 2 தேர்வில், இங்கு பயின்றவர்களில், 9 பெண் உட்பட, 13 பேர் தேர்ச்சி பெற்று, கருவூலம், பள்ளிக்கல்வி, போக்குவரத்து, வருவாய், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், நிதித்துறை, கூட்டுறவு, வேலை வாய்ப்பு பயிற்சித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிநியமனம் பெற்றனர்.

200 பேர் பயிற்சி

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:போட்டி தேர்வுக்கு தொடர்ச்சியாக வகுப்பு நடத்தி வருகிறோம். கலெக்டர் அலுவலகத்தின், 7வது தளத்தில், நுாலகமும் உள்ளது. கலெக்டரின் முயற்சியால், போட்டி தேர்வுக்குரிய 'அப்டேட்' செய்யப்பட்ட புத்தகங்கள், வினா வங்கி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.இது மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது; தற்போது, 200 பேர்பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி பெற வரும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.நான் கூட, குரூப்-1 தேர்வெழுதி தான் இந்த பணிக்கு வந்தேன். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களில், 80 சதவீதம் பேர் போட்டி தேர்வு வாயிலாக பணிக்கு வந்தவர்கள் தான்.அவர்கள் பயிற்சி பெற வரும் போட்டி தேர்வர்களுக்கு நம்பிக்கையாக உள்ளனர்; தங்களின் அனுபவத்தின் மூலம் கிடைத்த ஆலோசனையை வழங்குகின்றனர். 70 சதவீதத்தினர் பெண்கள்குறிப்பாக, திருமணமாகி, குழந்தை பிறந்த பின்னரும் கூட, போட்டி தேர்வெழுதி வெற்றி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி செய்யும் பெண் அலுவலர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் போட்டி தேர்வெழுத வரும் பெண் தேர்வர்களுக்கு நிஜ நம்பிக்கையாளர்களாக இருக்கின்றனர்.திருமணமாகிவிட்டால் வீடுகளில் முடங்கிவிட வேண்டியது தான் என்ற பொதுவான மனநிலை, இவர்களை போன்றவர்களால் தகர்க்கப்படுகிறது; பயிற்சி பெறுவோரில், 70 சதவீதம் பேர் பெண்கள் தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.போட்டி தேர்வர்களுக்கு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை சார்ந்த கூட்டங்கள் நடத்த பயன்படுத்தப்படும் பிரதான அரங்கையே போட்டி தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு நடத்த கலெக்டர் அனுமதி வழங்குகிறார்; தேர்வர்க ளுக்கு தேவையான வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில், கலெக்டர் ஆர்வம் காட்டுகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை