விவசாயிகளுக்கு கள் இறக்கும் உரிமை: கோவை எம்.பி., ராஜ்குமார் வாக்குறுதி
பல்லடம்:''கள் இறக்கும் உரிமை, விவசாயிகளுக்கு கிடைக்க முதல்வரிடம் பரிந்துரைப்பேன்'' என்று கோவை எம்.பி., ராஜ்குமார் உறுதியளித்தார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, நாதகவுண்டம்பாளையத்தில் முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபத்துக்கு, நேற்று வந்த கோவை எம்.பி., ராஜ்குமார், என்.எஸ்.பழனிசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், ''கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில், 40 எம்.பி.,க்களை பெற்றுள்ள நீங்கள், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கும் அனுமதியை மத்திய அரசிடம் போராடி பெற்றுத் தர வேண்டும். 'கள்'ளுக்கான தடையை நீக்க வேண்டும். ஆனைமலை -- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்'' என்றார். எம்.பி., பேசுகையில், ''கள் இறக்கும் உரிமை, விவசாயிகளுக்கு கிடைக்க, நிச்சயம் முதல்வரிடம் பரிந்துரைப்பேன். கள் இறக்கினால் தான் விவசாயிகள் கொஞ்சம் காசு பார்க்க முடியும் என்பது தெரியும். இதிலுள்ள அரசியல் உங்களுக்கும், எனக்கும் தெரியும்.கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே, சர்வதேச விமான நிலையம் அமைக்க, மத்திய அரசிடம் நிலத்தை ஒப்படைக்க முதல்வர் ஒப்புக்கொண்டார். ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், விவசாயிகள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வேன். இரு மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதால், ஆனைமலை-- நல்லாறு திட்டம் தள்ளிப்போகிறது; திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.