மூத்தோர் தடகள போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு
திருப்பூர், : பெங்களூருவில் அகில இந்திய அளவிலான, 45 வது மூத்தோர் தடகளப் போட்டி நடந்தது.இதில், 30 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் இப்போட்டியில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் களமிறங்கினர். 30 வயது பெண்கள் பிரிவு கோல் ஊன்றித் தாண்டுதலில், கலைமணி தங்கம் வென்று அசத்தினார். ஐந்து கி.மீ., நடை போட்டியில், கார்த்திகா வெண்கலம், 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு, உயரம் தாண்டுதலில் முத்துலட்சுமி வெள்ளி, இதே வயது பிரிவில் சந்தனமாரி 1,500 மீ ஓட்டத்தில், வெள்ளியும், 800 மீ., ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் வென்றார். 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு, தடை தாண்டும் ஓட்டத்தில் விஜயலட்சுமி வெள்ளி வென்றார்.ஆண்கள், 30 வயதுக்கு மேற்பட்டோர், சங்கிலி குண்டு எறிதலில் அருண்பிரதீப் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேவயது பிரிவு, 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் குமார் சேகர் வெள்ளி; 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு, குண்டு எறிதலில் மனோஜ் வெண்கலம் வென்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த தடகள வீரர், வீராங்கனைகள் ஒரு தங்கம், ஐந்து வெள்ளி, மூன்று வெண்கலம் உட்பட ஒன்பது பதக்கங்களை வென்று, பாராட்டுக்களை பெற்றனர்.அகில இந்திய அளவிலான, மூத்தோர் தடகளப் போட்டியில் அசத்திய வீரர், வீராங்கனைகளுக்கு, திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன், துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் செல்லமுத்து மற்றும் நிர்வாகிகள், பாராட்டு தெரிவித்தனர்.