கட்டிங் விற்பனை ஜோர்; மதுவிலக்கு போலீஸ் கொர்...
அவிநாசி : அவிநாசியில் நேற்று அரசு தடையை மீறி பாரில் மது விற்பனை படுஜோராக நடந்தது.திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், மீலாது நபி, மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழக அரசால் நடத்தப்படும் 'டாஸ்மாக்' மதுக்கடைகள், தனியார் கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், பார்கள் ஆகியவற்றில் மது விற்பனை தடை செய்யப்பட்டு அன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.அவ்வகையில், நேற்று மீலாது நபி தினத்தில், அவிநாசி, மங்கலம் ரோட்டில், டாஸ்மாக் (கடை எண்: 1507) மதுக்கடையுடன் இணைந்த 'பாரில்' பெட்டி பெட்டியாக மது வகைகளை அடுக்கி வைத்து, விற்பனை செய்து வந்தனர்.அதில், 'கட்டிங்' 50 ரூபாய், 'லார்ஜ்' 100 ரூபாய், 'குவாட்டர்' 200 ரூபாய் என சில்லறை விற்பனையும் ஜோராக நடைபெற்றது. குறிப்பாக, மதுப்பிரியர்களின் வசதிக்காக. 'கூகுள் பே' செயலியுடன் பாரில் வேலை செய்யும் நபர்கள் சேர் போட்டு அமர்ந்து, 'சைட் டிஸ்' உடன் விற்பனையில் 'பிஸியாக' ஈடுபட்டனர். அரசின் உத்தரவையும் மீறி, மீலாது நபி நாளில் மது விற்பனை பட்டப்பகலில் நடைபெற்றதை மதுவிலக்கு போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.