உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடக்கப் பள்ளி ஆசிரியர் வேலை நிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தொடக்கப் பள்ளி ஆசிரியர் வேலை நிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கல்வி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; இதனால், அரசு பள்ளிகளில் வழக்கமான கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டது.புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்வது உள்பட, 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் நேற்று, மாநில அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும், 2,500 ஆசிரியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 'டிட்டோஜாக்' சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தனர்.ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பிரபு, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜோசப், தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் தங்கவேல் உள்பட 12 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை சரி செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து, பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படவேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால், மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் நேற்று கல்விப்பணி பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !