உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீ ஜெயிச்சிட்டப்பா...!

நீ ஜெயிச்சிட்டப்பா...!

திருப்பூரில் முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் போட்டி நடந்தது. சிறப்பு குழந்தைகள், காதுகேளாதோர், கண் பார்வை, மனநலம் மற்றும் உடல்நலன் குறைபாடு உடையவர்கள், அவரவர் சிறப்பு பள்ளிகளில் இருந்து பங்கேற்றனர்.வழக்கமாக வீரர்களுக்கு போட்டி நடத்த ஒரு விசில் சத்தம் போதும். பயிற்சியாளர் கட்டளைக்கு ஏற்ப சிட்டாய் பறந்து விடுவர். ஆனால், இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆசிரியர், ஒரு பொறுப்பாளரை அழைத்து வந்திருந்தனர்.முதலில் 100 மீ., ஓட்டம் துவங்கியது. ஓரிருவர் புரிந்து கொள்ள மற்றவர்களுக்கு பொறுப்பாளர் சொல்லிக் கொடுத்தனர்.'நீ அங்க போய் நிக்கணும்பா, நான் அங்க வந்து நிற்பேன். வேகமாக ஓடி வரணும். விழுந்திடக்கூடாது,' என நடக்கும் குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல், பொறுமையாக ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்தனர்.அடுத்தது குண்டு எறிதல்; இதில் பங்கேற்ற காது கேளாதோருக்கு சைகை மொழியில் பயிற்சியாளர்களே குண்டெறிந்து காண்பித்தனர். எந்த கையில் குண்டு வீச வேண்டும் என்பது துவங்கி, அனைத்தையும் விவரமாக விளக்கினார்.அதே நேரம், வெற்றி இலக்கை நோக்கி, குண்டை எறிந்தவுடன், வெற்றியோ, தோல்வியோ நாம் வீசிவிட்டோம் என மகிழ்ச்சியில், துள்ளிக்குதித்தனர். அதிலும் குழுமியிருந்த பார்வையாளர்கள் கைதட்டி விட்டால், இவர்கள் முகத்தில் ஒளிர்ந்தது, ஆயிரம் விளக்குகளின் வெளிச்சம்.போட்டிகளின் நிறைவாக, 'நீ ஜெயிச்சிட்டப்பா. உனக்கு பரிசு தர்றாங்க,' என மேடைக்கு அழைத்தவுடன், அதை உணர்ந்து புருவத்தை துாக்கியபடி, புன்னகை தவழ பலரது கைதட்டல்களுக்கு மத்தியில் அவர்கள் மேடையேறி நடந்து வந்ததை பார்த்து, பலரின் கண்கள் குளமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை