உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னையை தாக்கும் நோய்கள்

தென்னையை தாக்கும் நோய்கள்

திருப்பூர்; திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் தென்னைகள் பாதிப்படைந்துள்ளன. அவற்றை பாதுகாக்க முடியாமல், மரங்களை வெட்டி சாய்த்து வரும் விவசாயிகளின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது.ஆனைமலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், இரண்டு நாள் தென்னை சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.இதில் பங்கேற்ற எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், ''தென்னைகளில் காய்ப்புத்திறன் குறைந்து வருகிறது. ஆண்டுக்கு, 300 -- 320 காய்கள் கிடைத்த நிலையில் தற்போது, 100 காய்கள் தான் கிடைக்கின்றன. மேலும், மரங்கள் காய்ப்பு இழந்து உள்ளன. காய்களின் எடை குறைந்து காணப்படுகிறது.தேங்காய்க்கு விலை கிடைத்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லை. விலை அதிகரிப்பதால் மக்கள் தான் பாதிக்கப்படுவர். தென்னை மரத்தை தாக்கும் வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த எப்போது தான் மருந்து கண்டுபிடிக்கப்படும் என வேளாண் விஞ்ஞானிகள் விளக்க வேண்டும். இன்னும், 10 ஆண்டுகளில் தென்னை விவசாயம் காட்சிப்பொருளாக மாறிவிடும்'' என்று வேதனை தெரிவித்தார்.இதற்கு அதிகாரிகள், 'வெள்ளை ஈயை கட்டுப்படுத்த வழிமுறைகள் வழங்கப்படுகிறது. விரைவில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,' என்று பதில் அளித்தனர்.அதேசமயம், ''தென்னை மரங்களில் பரவும் நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அரசு முயற்சி செய்து, ஒரே நேரத்தில் மருந்து தெளிப்பு போன்ற பணிகளை மேற்கொண்டால் உரிய பலன் கிடைக்கும்'' என்கின்றனர் விவசாயிகள்.

தோட்டக்கலை துறை அறிவுரை

அவிநாசி: அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2400 ஹெக்டர் பரப்பளவில் தென்னை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதில் ராக்கியாபாளையம், உப்பிலிபாளையம், ராமநாதபுரம், புதுப்பாளையம், தெக்கலுார், பொங்கலுார், ஆலத்துார் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் தென்னை மரங்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சில மாதங்களாக ரூகோள் சுருள் வெள்ளைஈக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.வெள்ளை ஈ தாக்கப்பட்ட தென்னை மரங்களின் ஓலையில் அடிப்பரப்பில் வட்டம் அல்லது சுருள் வடிவில் வெள்ளை ஈக்கள் முட்டை வைக்கிறது.அவற்றிலிருந்து குஞ்சுகள் தென்னை ஓலையின் சாற்றை உறிஞ்சி முழு வளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறுகிறது. இதனால் ஓலைகளின் மீது பசை போன்ற கழிவு திரவம் படர்ந்து அதன் மீது கரும் பூஞ்சாணம் வளர்கிறது. இதில் ஓலையின் பசுமை செயலிழந்து மகசூல் குறைகிறது.''தென்னந்தோப்புகளில் இரவு முழுவதும் விளக்கு பொறி வைத்து ஈக்களை அழிக்கலாம். ஏக்கருக்கு 10 விதம் 6 உயரத்தில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள் நிற பாலத்தின் தாளை மரங்களில் ஒட்டலாம்.ஈக்களின் குஞ்சுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நன்மை செய்யும் ஒட்டுண்ணியான என்கார்சியா கூட்டுப் புழுவை ஏக்கருக்கு 28 விதம் 10 மரம் இடைவேளையில் வைக்கலாம்'' என தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.மேலும் விவரங்கள் அறிய அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள தோட்டக்கலை துறையினரை அணுக கேட்டுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி