உடுமலை;மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், நான்கு மாதமாக மழை பொழிவு இல்லாததால், கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், வன விலங்குகள் உணவு, நீர் தேடி இடம் பெயர்வதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், அரிய வகை மரங்கள், வன விலங்குகள் என, உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளது. கடந்த, 4 மாதமாக மலைப்பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால், கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.வனப்பகுதிகளிலுள்ள காட்டாறுகள், நீர் ஓடைகள் வறண்டு, மரங்கள், புற்கள் காய்ந்து பசுமை இழந்துள்ளன. இதனால், யானை, காட்டுமாடுகள், மான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நீர் தேடி, மலையடிவார பகுதிகள், அமராவதி அணை, திருமூர்த்தி அணை பகுதியை நோக்கி வருகின்றன.உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள, உடுமலை - மூணாறு ரோட்டை கடந்து, குடிநீர் மற்றும் உணவு தேவைக்காக அமராவதி அணையை நோக்கி வனவிலங்குகள் படையெடுக்கின்றன.போக்குவரத்து அதிகம் உள்ள, புங்கன் ஓடை பாலம், யானைக்காடு, எஸ்.வளைவு, ஏழுமலையான் கோவில் பகுதிகளில், யானைக்கூட்டம் மற்றும் வன விலங்குகள் உலா வருகின்றன.இதனால், இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் எச்சரிக்கையாக ரோட்டை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில், வன விலங்குகள் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள்,குடிநீர்தொட்டிகள், போர்வெல் உடன் கூடிய குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரு மாநிலங்களை இணைக்கும் ரோட்டை வன விலங்குகள் அதிகளவு கடப்பதோடு, ரோட்டோரங்களில் முகாமிட்டுள்ளதால், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவும் திட்டமிட வேண்டும்.