சகோதரிகளிடம் நகை அபேஸ்; போலி சித்தர் அதிரடி கைது
அவிநாசி; சேவூர், வடுகபாளையம் தண்டுக்காரர் தோட்டத்தில் வசிப்பவர் வள்ளியம்மாள், 75. அவரது தங்கை பூவாத்தாள், 72. இருவரது கணவர்களும் இறந்த விட சகோதரிகள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.பக்கத்தில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தவர், திருப்பூர் - வேலம்பாளையம், நேரு நகரை சேர்ந்த சிவச்சந்திரன், 34. மூதாட்டிகளிடம் தான் அருள் வாக்கு சொல்லும் சித்தர், கலசம் வைத்து பூஜை செய்து வருவதாக கூறியுள்ளார்.கலசத்தில் தங்க நகை, பணம் வைத்து பூஜை செய்து அணிந்து கொண்டால் பல மடங்கு செல்வம் பெருகும் என்றார். இதனை நம்பிய மூதாட்டிகள் தங்க நகைகளை கொடுத்துள்ளனர். இதற்கிடையில், வள்ளியம்மாளின் மகன் தம்பிராஜ், நகைகள் இல்லாமல் இருந்ததை பார்த்து கேட்டார்.நடந்ததை மூதாட்டிகள் கூறியதும், சிவச்சந்திரனிடம் நகைகள் குறித்து கேட்டதற்கு, 'பூஜையில் உள்ளது; தருகிறேன்,' என்றார். புகாரின் பேரில் சேவூர் போலீசார், சிவச்சந்திரனை கைது செய்தனர்.