சின்ன வெங்காய நாற்று உற்பத்தி பணிகளில் விவசாயிகள் தீவிரம்
உடுமலை; சின்னவெங்காய சாகுபடிக்கு, விளைநிலங்களில் நாற்றங்கால் அமைத்து, பணிகளை உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில், ஆண்டுக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. முன்பு நேரடி நடவு முறையை விவசாயிகள் பின்பற்றி வந்தனர்.தற்போது, விளைநிலங்களில், நாற்றங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்து, நடவு செய்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காய சாகுபடியில் ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகிறது. குறிப்பாக, நாற்றுக்கும், விதை வெங்காயத்துக்கும் சீசனில் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக பெரும்பாலானவர்கள் நடப்பு சீசனில், விளைநிலங்களில், நாற்றங்கால் அமைத்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு, 13 பாத்தி அளவுக்கான நாற்றுகள் தேவைப்படுகிறது.நாற்று நடவு செய்யும் போது, 90 நாளில், சின்னவெங்காயத்தை அறுவடை செய்ய முடிகிறது. நடப்பு சீசனில், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.சின்ன வெங்காய நாற்று உற்பத்திக்கான விதைகளை தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியத்தில் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளுக்கும் தரமான நாற்று கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.