கருத்து கேட்பு என்ற பெயரில் நாடகம் விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம்
பல்லடம்:வேளாண் பட்ஜெட்டுக்கு கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில், நாடகம் நடத்தப்பட்டு வருவதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி, பல்லடத்தில் நேற்று கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், இதற்காக விவசாயிகளின் கருத்து கேட்கப்படும் எனவும், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை நடந்த நான்கு கருத்து கேட்பு கூட்டங்களிலும், விவசாயிகள் தெரிவித்த எந்தவித கருத்துக்களும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்த, விவசாய சங்க தலைவர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்டு, அதன் அடிப்படையில், பட்ஜெட் இருக்க வேண்டும். ஆனால், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தங்களுக்கு ஆதரவான லெட்டர் பேடு விவசாய சங்க தலைவர்களை வைத்துக்கொண்டு, போலியான கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி வருகிறார்.அவ்வகையில், கும்பகோணத்தில், 2025--26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிக்க கருத்துக்கேட்பு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், வழக்கம்போல் தி.மு.க., ஆதரவாளர்கள், போலி விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேச நினைக்கும் விவசாயிகளை அடக்கி வைத்து, 98 சதவீதம் பேர், தி.மு.க.,வின் ஆதரவாளர்களே பேசினர். இதனால், கருத்து கேட்பு எனும் நாடகம் சிறப்பாக நடந்து முடிந்தது. தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்காக, 83 வாக்குறுதிகளை அளித்துவிட்டு, 10-ஐ கூட நிறைவேற்றாமல் உள்ளது. மொத்தத்தில், வேளாண் நிதிநிலை அறிக்கை என்ற பெயரில், தி.மு.க., அரசு, விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.