பருத்திக்கு நல்ல விலை விவசாயிகள் எதிர்பார்ப்பு
உடுமலை:நடப்பு சீசனில், அனைத்து பருத்தி ரகங்களுக்கும், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உடுமலை பகுதி விவசாயிகள் உள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பருத்தி சாகுபடி பிரதானமாக இருந்தது. பி.ஏ.பி., பாசனத்தில், சுற்றுகள் குறைப்பு, நோய்த்தாக்குதல், நிலையில்லாத விலை உட்பட காரணங்களால், சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது.பல ஆயிரம் ஏக்கரில், மேற்கொண்ட சாகுபடி முற்றிலுமாக காணாமல் போய், சில ஆண்டுகளாக, 200 ஏக்கருக்கும் குறைவாக சாகுபடி செய்யப்படுகிறது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், 4 சுற்றுகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, தண்ணீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தளவே, பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த, 2009ல் பருத்திக்கு நல்ல விலை கிடைத்தது. அதன்பின்னர், ஏற்றுமதிக்கு தடை உட்பட காரணங்களால், விலை வெகுவாக சரிந்தது. மிக நீண்ட இழை பருத்தி ரகத்தில், ஏக்கருக்கு, 15 குவிண்டால் வரை விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது.சாகுபடியில், செடியின் 120வது நாளில், பருத்தி முதல் அறுவடை துவங்குகிறது. கடந்தாண்டு, பருத்திக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், நடப்பு சீசனில், நல்ல விலை கிடைக்க, மத்திய பருத்தி கழகம் வாயிலாக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.