மண் கால்வாய்களை சீரமைக்க! விவசாயிகள் எதிர்பார்ப்பு
உடுமலை, ;அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குரிய மண் கால்வாய்களை சீரமைத்து, கான்கிரீட் கரை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் வாயிலாக, 2,800 ஏக்கர், வரை பாசன வசதி பெறுகிறது.பருவமழை காலங்களில், அணைக்கு கிடைக்கும் நீர்வரத்து அடிப்படையில், இப்பாசன பகுதிகளுக்கு, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.மண் கால்வாய் உட்பட பழங்கால பாசன கட்டமைப்புகளை உள்ளடக்கிய, இந்த பாசன பகுதியில், பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.குறிப்பாக, அணையிலிருந்து பாசனப்பகுதிக்கு தண்ணீர் செல்லும் பிரதான கால்வாய்கள் அனைத்தும் மண் கால்வாயாகவே உள்ளன.இதனால், ஆங்காங்கே நீர் விரயம் ஏற்பட்டு, கோடை காலங்களில், கடை மடை பகுதிக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.இந்நிலையில், 2011-12ல் நீர்வள நில வள திட்டத்தின் கீழ், ராமகுளம் பழைய கால்வாய் சீரமைத்தல் உட்பட சில பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது.இதிலும், முழுமையாக சீரமைப்பு செய்யப்படாமல், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும், கான்கிரீட் கரை அமைக்கப்பட்டது; சில ஷட்டர்கள் பராமரிக்கப்பட்டன. அதன்பின்னர், எவ்வித பணிகளும் மேற்கொள்ளவில்லை. எனவே, கரைகள் அதிக சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், கான்கிரீட் கரை உருவாக்க வேண்டும்.அதிக தண்ணீர் வரும் போது, மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து சீரமைத்தால், கால்வாய் உடைப்பு ஏற்பட்டு பாசனம் பாதிப்பது தவிர்க்கப்படும். மேலும், தண்ணீர் திறப்பதற்கான ஷட்டர்களையும் பொதுப்பணித்துறையினர் பராமரிக்க விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.