நேரடி விற்பனை விளைபொருட்களுக்கும் செஸ் வரி விவசாயிகள் ஆட்சேபம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தென்னை, நிலக்கடலை, பருத்தி, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களை இருப்பு வைத்து, சந்தையில் கூடுதல் லாபத்துக்கு விற்க வகை செய்யும் நோக்கில், வேளாண் விற்பனை வணிகத்துறை சார்பில் கிடங்கு வசதியுடன் கூடிய விற்பனைக்கூடங்கள் உள்ளன.விற்பனைக் கூடங்களில் உறுப்பினராகி, அவற்றின் வாயிலாக விற்கப்படும் விளைபொருட்களுக்கு, அரசின் சார்பில், ஒரு சதவீதம் 'செஸ்' வரி வசூலிக்கப்படுகிறது. அதே நேரம், ஏராளமான விவசாயிகள், விளை நிலங்களில் இருந்து இடைத்தரகர் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ விளைப் பொருட்களை விற்பனை செய்து, வருமானம் ஈட்டுகின்றனர்.அவ்வாறு, நேரடி விற்பனைக்கு கொண்டு செல்லும் விளை பொருட்களுக்கு வேளாண்மை விற்பனை அதிகாரிகள், ஒரு சதவீதம் செஸ் வரி வசூல் செய்கின்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:வேளாண் விற்பனை துறையின், விற்பனைக்கூடத்தில் உறுப்பினராகி, அதன் வாயிலாக விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளிடம் இருந்து 'செஸ்' வரி வசூலிப்பது நியாயமானது. ஆனால், விவசாயிகள், நேரடியாக விற்பனைக்கு கொண்டு செல்லும் விளைபொருட்களை வழிமறித்து, 'செஸ்' வரி விதிப்பதென்பது ஏற்புடையதல்ல.வேளாண் விற்பனை அலுவலர்கள், பறக்கும் படை வாயிலாக கண்காணித்து, இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். இத்தகைய செயலை கைவிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனால், அதிகாரிகளுக்கும், எங்களுக்கும் மோதல்போக்கு ஏற்படுகிறது.விற்பனைக்கூடங்களில் விளைபொருட்களை இருப்பு வைத்தாலும், இரவு முழுவதும் தங்கி விவசாயிகள் அதை பாதுகாக்க வேண்டும். போக்குவரத்து செலவு இரு மடங்காவது என, பல்வேறு சிரமங்கள் இருப்பதால் தான், விவசாயிகள், விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.